அசிடிட்டி எதனால் வருகிறது? தீர்வு என்ன?
உணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகள் வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல் இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிடி' என்கிறோம்.
`அசிடிடி' எனப்படும் இந்த வார்த்தை அடிக்கடி அநேகரால் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதை முறையாய் கட்டுப்படுத்தாவிடில் மிகப்பெரிய பிரச்சனைக் கூட உருவாக்கிவிடும். நெஞ்செரிச்சலில் காணப்படும் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்...
வயிற்றில் எரிச்சல்: உணவுக் குழாய், வயிறு கபகபவென எரிவது போல் இருக்கும்.
நெஞ்சு வலி: நெஞ்சு வலி ஏற்படுவதன் காரணம் வயிற்றிலிருந்து `ஆசிட்' உணவுக்குழாய் மேல் நோக்கி அள்ளி வீசுகின்றது. இதன் வலி அதிகமாகவும், அதிக நேரமும் இருக்கின்றது. பலர் இந்த வலியினை நெஞ்சு வலியாக எடுத்துக் கொள்வர். இருப்பினும், நெஞ்சு வலி எதனால் என்பதனை மருத்துவ பரிசோதனை மூலம் அறிய வேண்டும்.
ஓய்வின் போது அதிக வலி: வயிற்றில் உள்ள `ஆசிட்' வயிற்றின் மேலாக ஒருவர் படுத்திருக்கும் பொழுதும், முன் பக்கமாக குனியும் பொழுதும் மேலெழுந்து வரும். நேராக அமர்ந்திருந்தால் இது நிகழாது. அதனால்தான் `ஆசிட்' தொல்லை இருக்கும் பொழுது நேராக அமர்ந்தோ அல்லது தலையை உயர்த்திய வாக்கில் சாய்ந்தோ இருக்கவேண்டும்.
உணவுக்குப் பிறகு வலி: விருந்து போன்ற கனமான உணவுக்குப் பிறகு ஏற்படும் வலியின் பொருள் வயிற்றினால் அந்த கனத்தினை தாங்க முடியவில்லை என்பதே. அதேபோல் உணவு உண்ட உடனே படுப்பதும், சாய்ந்து அமர்வதும் கூடாது.
கசப்பு ருசி: வயிற்றிலிருந்து வெளிவரும் `ஆசிட்' தொண்டை வழி வாய்க்கு வரும்பொழுது வாயில் ஒருவித கசப்பு உணர்வு ஏற்படும். ஒருசில நேரங்களில் இது தொண்டை அடைப்பினை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஏற்பட்டால் அதுவும் குறிப்பாக இரவில் ஏற்பட்டால் உடனடி மருத்துவரை அணுகவும்.
குரல் கரகரப்பு: திடீரென குரல் தடித்து மாறுகின்றதா? ஆசிட் தொண்டை வரை வந்து குரல் வளையை பாதித்து உங்கள் குரல் ஓசையை கடினமானதாக மாற்றலாம்.
தொண்டை பாதிப்பு: தொண்டை வலி குறிப்பாக சாப்பிட்ட பிறகு ஏற்படலாம்.
இருமல், இழுப்பு: சாப்பிட்ட பிறகு ஏற்படும் இருமல், மூச்சிழுப்பு போன்றவை இருந்தால் `அசிடிடி' இருக்கின்றதா என பரிசோதனை செய்துக் கொள்ளவும்.
அஜீரணம் மற்றும் மலச்சிக்கல், ஆஸ்த்துமா: நெஞ்செரிச்சல் இருமல், இழுப்பு என ஆஸ்த்துமா வரை கொண்டு செல்லலாம். வயிற்றில் உள்ள ஆசிட், நெஞ்சில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதால் மூச்சு குழாய்கள் ஆசிட் உள்ளே நுழையாதிருப்பதற்காக சுருங்குகின்றன. இதனால் ஆஸ்த்துமா ஏற்படுகின்றது.
வயிற்றுப் பிரட்டல்: வயிற்றுப் பிரட்டல் வாந்தி வருவது போன்ற ஒரு தவிப்பு இவற்றிற்கு பல காரணங்கள் கூற முடியும். என்றாலும், உணவுக்குப் பிறகு இவ்வாறு ஏற்படுவது `அசிடிடி' காரணமாக இருக்கக் கூடும்.
அதிக எச்சில்: வயிற்றில் உருவாகும் ஆசிட்டை வெளியேற்ற வாயில் அதிக எச்சில் சுரக்கும். சில நேரங்களில் `அசிடிடி' காரணமாக விழுங்குவது சிரமமாகத் தெரியும்.
* புகைபிடித்தல் வயிற்றில் உள்ள வால்வினை பலமிழக்கச் செய்வதன் மூலம் அசிடிடி ஏற்படலாம்.
* வலிக்கான மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது `அசிடிடி' உருவாகக் காரணமாகலாம்.
* மன உளைச்சல் உடையோருக்கு அசிடிடி அதிகம் இருக்கும்.
* பெப்பர்மென்ட் போன்ற உணவு அசிடிடியை உருவாக்கலாம்.
* அதிக எடை அசிடிடி உருவாக்கும்.
* அசிடிடிக்கு மரபணு ஒரு காரணம். தவிர்க்கும் முறைகள்:
* இரவில் அதிக நேரம் கழித்து உணவு உண்பதனை தவிர்த்து விட வேண்டும்.
* எப்பொழுதும் கைவசம் இதற்காக எளிதில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்தினை வைத்திருங்கள்.
* சர்க்கரை இல்லாத `சூயிங்கம்மினை' 30 நிமிடங்கள் மெல்ல அசிடிடி நீங்கும் என ஆய்வு கூறுகின்றது.
* `பேக்கிங் சோடா' அதனை அரை டீஸ்பூன் ஒரு கிளாஸ் நீரில் கலந்து உட்கொள்ள அசிடிடி குறையும். ஆனால், இதனை அடிக்கடி செய்யக்கூடாது. இதில் உப்பு அதிகம் என்பதால் வீக்கமும், வயிற்றுப் பிரட்டலும் ஏற்படக்கூடும்.
* சோற்றுக்கற்றாழை ஜுஸ் மிகச்சிறந்த நிவாரணி.
* அதிக கொழுப்புச்சத்து, எண்ணெய், மசாலா உணவைத் தவிர்த்து ஓட்ஸ், வாழைப்பழம் என உணவுப் பழக்கத்தினை மாற்றுங்கள்.
* தினமும் 4 கிராம் இஞ்சி (அ) 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* தக்காளியினை தவிர்த்து விடுங்கள். எலுமிச்சை ஜுஸ், ஆரஞ்சு இவற்றினை தவிர்த்து விடுங்கள்.
* சிறு சிறு உணவாக அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஆல்கஹாலை அடியோடு தவிருங்கள்.
* மசாலா, கார உணவு, வெண்ணெய், பச்சை வெங்காயம் இவை கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.
* மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள்.
* தலையை சற்று உயர்த்தி படுங்கள். செய்யக்கூடியதும், செய்யக் கூடாததும் செய்யக் கூடாதவை:-
* அதிக காரம், மிளகாய் கூடாது.
* அதிக கொழுப்பு மிக்க பால், சீஸ் அல்லது ஐஸ்க்ரீம் கூடாது.
* பட்டாணி, பீன்ஸ், கோஸ் கூடாது.
* பச்சை காய்கறிகளை அப்படியே உண்ணுவது கூடாது.
செய்யக் கூடியவை:-
* சிறிதளவு இனிப்பு, உணவுக்கு முன்னால் எடுத்துக் கொள்ளலாம்.
* பேரீச்சை, அத்தி, நாவல்பழம், தேங்காய், மாம்பழம், பப்பாளி, மாதுளை எடுத்துக் கொள்ளலாம்.
* காரட் இலை, செல்லெரி இலை, கறிவேப்பிலை மிகவும் உகந்தது.
* சர்க்கரைவள்ளி கிழங்கு, காரட், பீட்ரூட் அசிடிடிக்குச் சிறந்தது.
* சீரகம், தனியா, ஏலக்காய் சிறந்தது.
* பார்லி, கம்பு, கோதுமை நல்லது.
* அதிக கொழுப்பற்ற வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது குளிர்ந்த பால் நல்லது.
* பாதாம் மிக மிகச் சிறந்தது.
* புதினா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது சிறந்தது.
* துளசி இலை சிலவற்றினை மெல்வது நல்லது.
* இளநீர் 4-5 முறை சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.
* தர்பூசணி, வெள்ளரி அசிடிடிக்கு மிகவும் சிறந்தது.
* இஞ்சி சாறு 2 டீஸ்பூன் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
* துளசி, சோம்பு, கிராம்பு, சீரகம் போன்றவை அசிடிடியினை தவிர்க்கும்.
* காலையில் 1-2 க்ளாஸ் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிப்பது அடிசிசிடிக்கு நல்லது.
* சிறு துண்டு வெல்லத்தை 2 மணிக்கொரு முறை வாயில் வைத்து அந்நீரை விழுங்க அசிடிடி கட்டுப்படும்.
* காலையில் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு பருக அசிடிடி குறையும்.
* வெள்ளரிக்காய் ஜுஸ் அல்லது வெள்ளரி உண்பது அசிடிடியை குறைக்கும்.
* அரிசிப்பொறி சாப்பிட அது அசிடிடியை உறிஞ்சி விடும்.
* அதிக பழம், காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இதுபோன்ற உணவு செரிக்க உடலுக்கு குறைந்த சக்தியே தேவைப்படுகின்றது. இந்த உணவினால்...
* மூளை சுறுசுறுப்பு
* சுத்தமான ஆரோக்கிய சருமம்
* அதிக நோய் தாக்குதல் இன்மை
* ஆழ்ந்த தூக்கம்
* நல்ல செரிமானம்
* உறுதியான எலும்பு
* அதிக சக்தி
* எடை குறைதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றது.
ஆசிட் வகை உணவுகளான காப்பி, ஆல்க ஹால், சர்க்கரை, உப்பு, சிகப்பு மாமிசம் இவற்றினை தவிர்த்து விடுங்கள். இதுபோன்ற அசிடிக் உணவினால் * எடை கூடுதல்
* சோம்பல்
* வயிறு உப்பிசம்
* மோசமான சருமம்
* கவனமின்மை
* செரிமானக் கோளாறுகள்
* ஆரோக்கியமற்ற கூந்தல்
* உடையும் நகம்
* பல் பிரச்சனைகள்
* சோர்வு
* தலைவலி
* நரம்புத் தளர்ச்சி
* மன உளைச்சல்
* உடல் உஷ்ண குறைவு ஏற்படும்.