கறிவேம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வகுப்பு: | மெய்யிருவித்திலையி |
வரிசை: | Sapindales |
குடும்பம்: | Rutaceae |
பேரினம்: | Murraya |
இனம்: | M. koenigii |
இருசொற் பெயரீடு | |
Murraya koenigii (லி.) Sprengel[1] |
தோற்றம்[தொகு]
வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
மருத்துவ குணங்கள்[தொகு]
சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவு. நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்[சான்று தேவை].வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர். [சான்று தேவை]
சொல் விளக்கம்[தொகு]
கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்."கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
இலங்கை மற்றும் பிறநாடுகளில்[தொகு]
கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.